×

காஷ்மீர் விபத்தில் ஏற்காடு ஆசிரியை குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு: கோடை சுற்றுலா சென்ற போது கார் கவிழ்ந்தது


ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காடு தலைச்சோலை கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்த கற்பகவள்ளி குடும்பத்துடன் காஷ்மீரில் பலியானது மாணவ, மாணவிகள், ஊர் பொதுமக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ளது சோனாமார்க் பகுதி. இங்கிருந்து கந்தர்பால் மாவட்டத்தின் காங்கன் பகுதியை நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை (28ம் தேதி) மாலை 5.30 மணியளவில் வாடகை கார் ஒன்று சென்றது. 9 பேர் அந்த காரில் பயணம் செய்துள்ளனர். இந்த கார் சுகன்கீர் பகுதியில் வந்தபோது பனியின் காரணமாக சாலை வழுக்கியதில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சிந்து ஆற்றில் கவிழ்ந்தது.

இதில் 2பேர் காயமடைந்த நிலையில், 4பேர் கிரேன் மூலம் சடலமாக மீட்கப்பட்டனர். மீதியுள்ள 3பேரை தேடும் பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் இறந்த 4 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என்பது தெரியவந்தது. தீவிர விசாரணையில் இந்த விபத்தில் குடும்பத்துடன் பலியானது சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்த பள்ளி ஆசிரியை கற்பகவள்ளி என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. ஏற்காட்டில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைச் சோலை கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றியவர் கற்பகவள்ளி (42).

இவர் தனது கணவர் செல்வம்(48) மற்றும் குழந்தைகள் லக்‌ஷனா, பிரீத்தா ஆகியோருடன் ஒருவாரத்திற்கு முன்பு காஷ்மீருக்கு கோடை சுற்றுலா சென்றுள்ளார். இதன் ஒரு பகுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (28ம்தேதி) காஷ்மீரின் தலைநகரான நகர் பகுதிக்கு இன்பச்சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது தம்பதியர் குழந்தைகளுடன் சென்ற கார் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதில் 4பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது தெரியவந்துள்ளது.

The post காஷ்மீர் விபத்தில் ஏற்காடு ஆசிரியை குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு: கோடை சுற்றுலா சென்ற போது கார் கவிழ்ந்தது appeared first on Dinakaran.

Tags : Yercaud ,Kashmir ,Karpagavalli ,Thalicholai ,Salem district ,Sonamark ,Jammu ,Kangan ,Ganderbal district ,
× RELATED ஏற்காடு விபத்து: காயம் அடைந்தோருக்கு இபிஎஸ் ஆறுதல்